Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போட திட்டம்

ஏப்ரல் 09, 2021 11:30

கோவை: கோவை மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இதுவரை 50 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இதுவரை 50 ஆயிரத்து 227 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 11-ந் தேதி முதல் மொபைல் வேக்ஸினேசன் திட்டத்தை தொடங்க உள்ளோம். அதன்படி குறிப்பிட்ட அளவு தடுப்பூசியை பொதுமக்கள் வசிக்கும் தெருக்களுக்கு எடுத்து சென்று போடும் பணியை தொடங்க உள்ளோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மாநகராட்சி பகுதிகளை பொறுத்தவரை கடந்த 4 நாட்களாக 180 முதல் 220 பேர் வரை கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒரு தெருவில் 3 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் வீடுகளை ஒருங்கிணைத்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கிறோம். தற்போது வரை மாநகரில் 41 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரிசோதனை செய்தால் பாதிப்பு வந்து விடுமோ என்று மக்கள் அச்சப்படாமல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனையில் தொற்று உறுதியானால் உரிய சிகிச்சை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல் காய்கறிக் கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து மீறினால் சம்பந்தப்பட்ட கடை, வணிக நிறுவனங்கள் பூட்டப்படும் என்று அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்