Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியிருப்புகளை காலி செய்ய போக்குவரத்து ஊழியர்களுக்கு நோட்டீசு

ஏப்ரல் 09, 2021 11:33

பெங்களூரு: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் உப்பள்ளியில் உள்ள அரசு குடியிருப்புகளை காலி செய்யும்படி நோட்டீசு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் 6-வது ஊதியக் குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை போராட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளனர்.


தொடர் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் அரசு பஸ் சேவை 2-வது நாளாக நேற்றும் முடங்கியது. இதனால் அரசு தனியார் பஸ்கள், வாடகை கார்களை இயக்க அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து கழக ஊழியர்களை வழிக்கு கொண்டுவர எஸ்மா சட்டத்தை கையில் எடுக்கவும் கர்நாடக அரசு ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிடும் வகையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அதாவது, கர்நாடக அரசின் குடியிருப்புகளில் வசித்து வரும் போக்குவரத்து கழக ஊழியர்கள் வெளியேறும்படி நோட்டீசு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் அரசு குடியிருப்பில் வசித்து வரும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு நேற்று அதிகாரிகள், வேலை நிறுத்தத்தை கைவிடும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

உப்பள்ளி கோகுல்ரோடு பகுதியில் உள்ள போக்குவரத்து ஊழியர்கள் குடியிருப்பில் நோட்டீசுகளையும் அதிகாரிகள் ஒட்டிச் சென்றுள்ளனர். அந்த நோட்டீசில், கர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உடனே வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.

இல்லையெனில் அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 உப்பள்ளி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அரசு குடியிருப்பில் உள்ள போக்குவரத்து ஊழியர்களை காலி செய்யும் படி அதிகாரிகள் நோட்டீசு வழங்கி  வருகிறார்கள். இது போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் ெபரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்