Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விராலிமலையை சேர்ந்த ராணுவ வீரர் கொரோனாவுக்கு பலி

ஏப்ரல் 10, 2021 11:36

விராலிமலை: கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட விராலிமலையை சேர்ந்த ராணுவ வீரர், வைரஸ் தொற்றுக்கு பலியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை டைமண்ட் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). ராணுவ வீரரான இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே தற்போது புவனேஸ்வரி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். ராணுவ வீரர் என்ற முறையில் செல்வக்குமார் தான் பணிபுரியும் இடத்திலேயே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. காய்ச்சலும் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் செல்வகுமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருந்த போதிலும் நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் அவர் இறந்தது சக ராணுவ வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செல்வகுமார் இறந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் பேரதிர்ச்சி அடைந்தனர். அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

ராஜஸ்தானில் இருந்து இன்று சிறப்பு விமானம் மூலம் பலியான செல்வகுமாரின் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான திருச்சி-மணப்பாறை இடையே உள்ள மறவனூர் சத்திரம் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் அவரது சொந்த கிராமம் மற்றும் விராலிமலை பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. இதற்கிடையே விராலிமலை ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்த 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்