Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா பானர்ஜி வன்முறையை தூண்டுகிறார்: மோடி குற்றச்சாட்டு

ஏப்ரல் 10, 2021 12:43

கொல்கத்தா: தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி முகவர் என அனைவரையும் மம்தா பானர்ஜி தவறாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களும், பா.ஜனதா தொண்டர்களும் மோதிக்கொண்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த  மத்திய ரிசர்வ் பிரிவு போலீஸ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். 

இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வன்முறைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, வாக்குச்சாவடி மூடப்பட்டது. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பாதுகாப்பு படையை பா.ஜனதா தவறாக பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். இந்நிலையில், பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கினார். 

தோல்வி பயம் காரணமாக தேர்தலில் மம்தா பானர்ஜி வன்முறையைத் தூண்டுவதாக மோடி குற்றம்சாட்டினார். ‘தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி முகவர் என அனைவரையும் மம்தா தவறாக பயன்படுத்துகிறார். பாதுகாப்புப் படையினரைத் தாக்க மக்களைத் தூண்டினால், தேர்தல் தோல்வியில் இருந்து மம்தாவை காப்பாற்ற முடியாது. இந்த தேர்தல் பாஜகவின் போராட்டம் மட்டுமல்ல, மக்களின் போராட்டம். மம்தாவின் கோபத்திற்கு காரணம் பாஜக மற்றும் மோடி மட்டுமல்ல, அவர் மீதான நம்பிக்கையை முறித்துக் கொண்ட மக்களும் ஒரு காரணம்’ என்றும் மோடி பேசினார்.

தலைப்புச்செய்திகள்