Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாராளுமன்றத் தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 4 முதல் விருப்ப மனு அளிக்கலாம்

ஜனவரி 30, 2019 11:11

சென்னை: பாராளுமன்றத்துக்கு வருகிற ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அட்டவணையை மார்ச் முதல் வாரம் வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் அட்டவணை வெளியாக சுமார் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க தன்னை தயார்படுத்தி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை கைப்பற்றி அ.தி.மு.க. சாதனை படைத்தது. 

அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. மிக வலுவாக செயல்பட்டதால் வரலாற்று முத்திரை பதிக்கும் வகையில் அந்த வெற்றி சாதனையை அ.தி.மு.க. நிகழ்த்தி இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், டி.டி.வி. தினகரன் தலைமையில் மற்றொரு அணியாகவும் அ.தி.மு.க. பிளவுபட்டு உள்ளது. 

இந்த நிலையில் மீண்டும் மகத்தான வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தின்கீழ் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் ஆளும் அ.தி.மு.க. தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்பட சில கட்சிகளுடன் சேர்ந்துவலுவான கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறது. என்றாலும் அதற்கான பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக இன்னமும் நடைபெறவில்லை. 

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பிரசாரம் செய்யவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை கடந்த வாரம் புதன்கிழமை அ.தி.மு.க. மேலிடம் அமைத்தது. அந்த 3 குழுவினரும் தங்களது பணியினை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பாராளுமன்ற தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணியில் இறங்கி உள்ளனர். அதன்படி அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பித்து உள்ளன. 

இதற்காக ஜெயலலிதா பாணியில் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறும் திட்டத்தை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கையில் எடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 

பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அ.தி.மு.க.வின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

எனவே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தலைமைக் கழகத்தில் வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு கொடுக்கலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரத்தை செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல் வம் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்