Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா? முதல்வர்

ஏப்ரல் 12, 2021 09:40

சென்னை:நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.இங்கு தினசரி பாதிப்பு 6 ஆயிரத்து 500-ஐ எட்டியுள்ளது. தற்போது 41 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். நேற்று மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக இருந்த படுக்கைகள் மீண்டும் நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.

எனவே தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த 8-ந் தேதி தமிழ்நாட்டில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இது 10-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனாலும் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதால் இன்னும் பல கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.பகல் 12 மணிக்கு கூட்டம் தொடங்கியது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசு அமைத்துள்ள கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதில் பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக 5 அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்கள்.புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துவது, பிளஸ்-2 தேர்வை தள்ளி வைப்பது, மேலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகிய 5 திட்டங்கள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தினார்கள்.

ஏற்கனவே கோவில் திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண விழாக்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் தியேட்டர்கள், ஓட்டல்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவற்றில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிப்பது என்றும் அறிவிக்கப்பட்டது.இப்போது மேலும் கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கடந்த முறை கொரோனா தாக்கம் மோசமாக இருந்தபோது, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோன்று மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அது பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடும்.எனவே இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டத்தை இன்னும் வேகப்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்தகட்ட கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசு தன்னிச்சையாக அறிவித்திட முடியாது. தேர்தல் கமி‌ஷனிடம் அனுமதிபெற்று பின்னர் அறிவிக்கப்படும்.

தலைப்புச்செய்திகள்