Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகள் திறப்பு

ஏப்ரல் 12, 2021 10:47

சென்னை :கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தம் 1800 சிறு மொத்த விற்பனை கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டில் கடந்த 10-ந் தேதி முதல் சிறு மொத்த விற்பனை கடைகள் செயல்பட அனுமதி கிடையாது என்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஒட்டு மொத்தமாக கடைகள் மூடப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று சிறு மொத்த வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோர் கடந்த 9-ந்தேதி அங்காடி நிர்வாக குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் உடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்காடி நிர்வாக குழு சார்பில் வியாபாரிகளுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது.இந்த நிலையில் இன்று முதல் சுழற்சி முறையில் 50 சதவீதம் சில்லரை விற்பனை கடைகள் செயல்பட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி இரட்டைபடை வரிசை எண் கொண்ட கடைகள் அனைத்தும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களும் அதேபோல் ஒற்றைபடை வரிசை எண் கொண்ட கடைகள் அனைத்தும் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய 3 நாட்களில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 1800 கடைகளில் இன்று 900 சிறு மொத்த விற்பனை கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் மார்க்கெட்டில் கூட்டம் குறைந்துள்ளது. சமூக இடைவெளியுடன் வியாபாரிகள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர் மார்க்கெட் வியாபாரிகள், ஊழியர்கள் தொழிலாளர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து,சமூக இடைவெளியை உரிய முறையில் பின்பற்றுகிறார்களா? என அங்காடி நிர்வாக குழு ஊழியர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.விதிகளை மீறும் வியாபாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கடைகள் ‘சீல்’ வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகின்றனர்.

சிறு மொத்த வியாபாரி சங்க தலைவர் எஸ்.எஸ் முத்துக்குமார் கூறியதாவது:இரட்டை இலக்க வரிசை, ஒற்றை இலக்க வரிசைபடி மார்க்கெட்டில் கடைகள் திறப்பது என்பது சாத்தியபடாது. ஏனென்றால் ஒரு பிளாக்கில் 1,2,3, என கடைகள் ஒரே வரிசையாகவும் ஒரு பிளாக்கில் 1,2,3 என கடைகள் எதிர் எதிரேவும் அமைந்து உள்ளதால் சமூக இடைவெளி பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.எனவே இரவு தொடங்கி காலை 6 மணி வரை விற்பனை நேரத்தை குறைத்து அனைத்து கடைகளையும் திறக்க வியாபாரிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மார்க்கெட் வளாகத்தில் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் தடை செய்யப்படும் என்று முத்துக்குமார் கூறினார்.

தலைப்புச்செய்திகள்