Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 12, 2021 10:48

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

நாளை தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கி.மீ.) கூடிய கனமழை பெய்யக்கூடும்.15-ந் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

16-ந் தேதி மேற்கு தொடர்ச்சியை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணிநேரத்தில் குழித்துறை, உசிலம்பட்டியில் அதிகபட்சமாக தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி இருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்