Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.4¾ கோடிக்கு செல்லாத நோட்டுகள் பறிமுதல்- 3 பேர் கைது

ஏப்ரல் 13, 2021 05:47

சிவகங்கை: காளையார்கோவில் அருகே ரூ.4¾ கோடிக்கு செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக செங்கல்பட்டு பெண் மற்றும் டாக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

செங்கல்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி வரலட்சுமி (வயது 45). இவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பழைய செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மூலமாக மாற்றி தருவதாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியை சேர்ந்த அருள்சின்னப்பன் கூறி இருக்கிறார். 

இதை நம்பி வரலட்சுமி, தனது தம்பி அசோக்குமாருடன் செல்லாத ரூபாய் நோட்டுகளை 3 பைகளில் நிரப்பிக்கொண்டு காரில் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு வந்துள்ளார். அவர்கள் நேற்று மாலை காளையார்கோவில் அருகே வளையம்பட்டி கிராமத்தில் உள்ள அருள்சின்னப்பன் (43) வீட்டிற்கு வந்தனர். அங்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை அருள்சின்னப்பனிடம் கொடுத்தனர். 

இதற்கிடையே இது பற்றிய ரகசிய தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காளையார்கோவில் போலீசார் அருள்சின்னப்பன் வீட்டை சுற்றி வளைத்து அவர்களை பிடித்தனர். மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சம் அளவுக்கு செல்லாத 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். உடனடியாக வரலட்சுமி, அவரது தம்பி அசோக்குமார், அருள்சின்னப்பன் ஆகிய 3 பேரையும் காளையார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினார்கள். 

பின்னர் அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் அருள்சின்னப்பன் பிசியோதெரபி டாக்டர் என்பது தெரியவந்துள்ளது.

தலைப்புச்செய்திகள்