Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள்: புதுவையில் அறிமுகம்

ஏப்ரல் 13, 2021 11:53

புதுவையில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் விழிப்புணர்வுக்காகப் பலவித நடவடிக்கைகள் அரசுத் தரப்பில் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணியில் அரசின் பாண்லே நிறுவனமும் இறங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பாண்லே பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் இன்று முதல் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை பாண்லே அச்சிட்டது. அதைத் தொடர்ந்து கரோனா விழிப்புணர்வுப் பணியில் பாண்லே இறங்கியுள்ளது.

இதுகுறித்து பாண்லே மேலாண் இயக்குநர் சுதாகர் கூறுகையில், "கரோனா விழிப்புணர்வுக்காகத் தினமும் பாண்லே பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகம் அச்சிடப்படும். சராசரியாக 1.5 லட்சம் பால் பாக்கெட்டுகளில் வாசகங்கள் அச்சிடப்படும். அதில், "கரோனா தடுப்பூசி- நம்மைக் காப்போம்- நாட்டை மீட்போம்", "என்னுடைய முகக் கவசம் உங்களைப் பாதுகாக்கும்- உங்களுடைய முகக்கவசம் என்னைப் பாதுகாக்கும்" என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன" என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பாண்லே ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 

தலைப்புச்செய்திகள்