Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேர்தல் கமி‌ஷன் முடிவை எதிர்த்து மம்தா தர்ணா போராட்டம்

ஏப்ரல் 13, 2021 11:57

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநில தேர்தலில் பல இடங்களில் வன்முறைகள் நடந்தன. கூச்பெகார் பகுதியில் நடந்த மோதலில் மத்தியபடை போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இது அந்த மாநிலத்தில் பெரும் விவகாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி மத்திய படைகள் மீது ஏற்கனவே குற்றம் சாட்டி இருந்தார். மத்திய படையினர் பெண்களிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், அவ்வாறு யாராவது நடந்தால் அவர்களை முற்றுகையிடுங்கள் என்றும் கூறியிருந்தார்.

இதனால்தான் மத்திய படையினரை திரிணாமுல் காங்கிரசார் முற்றுகையிட்டதாகவும், அது மோதலாக மாறி துப்பாக்கி சூட்டில் முடிந்ததாகவும் பாரதிய ஜனதாவினர் குற்றம் சாட்டினர். மேலும் ஒரு கூட்டத்தில் பேசும்போது மம்தா பானர்ஜி மத ரீதியாக கருத்துக்களை தெரிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமாக மம்தா மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ நக்வி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக தேர்தல் கமி‌ஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 8 மணிமுதல் இன்று இரவு 8 மணிவரை 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய தேர்தல் கமி‌ஷன் தடை விதித்தது. இதனால் அவருடைய இன்றைய தேர்தல் பிரசாரம் தடைபட்டது. இதை எதிர்த்து மம்தா பானர்ஜி இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். அதன்படி இன்று மதியம்  கொல்கத்தாவில் உள்ள காந்திமூர்த்தி மைதானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரசாரத்தின் போது காலில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் அவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே பிரசாரம் செய்து வந்தார். இன்றைய தர்ணா போராட்டத்துக்கும் சக்கர நாற்காலிலேயே வந்தார். அந்த மைதானத்தில் உள்ள மதில்சுவரை ஒட்டி சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அதற்கு கீழே மம்தா தன்னந்தனியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தர்ணாவில் ஈடுபட்டார்.

அவருடன் வேறு யாரும் பங்கேற்கவில்லை. பாதுகாப்பு அதிகாரிகளும், முக்கிய அதிகாரிகளும் சற்று தூரத்தில் அமர்ந்து இருந்தனர். மம்தா போராட்டம் ஈடுபட்ட இடத்தில் 3 மின்விசிறிகள் வைக்கப்பட்டு இருந்தன. யாரிடமும் எதுவும் பேசாமல் மவுனமாக அவர் அமர்ந்திருந்தார். இன்று மாலை வரை அவர் போராட்டத்தை தொடர உள்ளார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமி‌ஷனிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் தேர்தல் பிரசாரத்தில் அவதூறான கருத்துக்களை கூறி இருக்கிறார்கள். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
யார்-யார் என்னென்ன பேசினார்கள் என்ற விவரங்களையும் அந்த மனுவுடன் இணைத்து கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே பா.ஜனதா முன்னனி தலைவர்களில் ஒருவரான ராகுல்சின்கா அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. மத்திய படையினரால் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வி‌ஷயம் பற்றி கூறிய அவர், 4 பேருக்கு பதில் 8 பேரை கொன்று இருக்க வேண்டும் என்று கருத்து கூறியிருந்தார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தப்பட்டது.

இதையடுத்து அவர் 2 நாள் தேர்தல் பிரசாரம் செய்ய தடைவிதித்து தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று பிரபல தேர்தல் கணிப்பு நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம்தான் தேர்தல் பிரசார திட்டங்களை வகுத்து கொடுத்தது. அதே போல மம்தா பானர்ஜிக்கு இந்த நிறுவனம்தான் திட்டம் வகுத்து கொடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காளத்தில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த கட்சி 40 சதவீதம் ஓட்டுகளை பெறுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆனால் மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மம்தாபானர்ஜி வலுவான தலைவராக உள்ளார். அவர் மீது மக்கள் மிகுந்த அன்பும், நம்பிக்கையும் கொண்டுள்ளனர். எனவே திரிணாமுல் காங்கிரஸ் 45 சதவீத வாக்குகளை பெறும். இதனால் அந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி.

பாரதிய ஜனதா மிக சிறப்பாக இங்கு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது. அதனால் அவர்கள் வலுவாக மாறி இருக்கிறார்கள். ஆனாலும் 100 இடங்களுக்கு மேல் அவர்களால் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்