Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

ஏப்ரல் 14, 2021 07:51

புதுடில்லி:''ஒருவரை கூட தவிர்க்காமல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க இந்தியா உறுதி எடுத்துள்ளது'' என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று 50 நாடுகள் பங்கேற்கும் 'ரெசினா மாநாடு' துவங்கியது. கொரோனா காரணமாக 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நடந்த இந்த மாநாட்டில்வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: இந்த உலகம் 'வசுதேவ குடும்பம்' என்ற ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் கொள்கை.

உலகம் எப்படி இந்தியாவிற்கு முக்கியமோ அதுபோல உலகிற்கும் இந்தியா முக்கியமாக விளங்குகிறது.கொரோனாவுக்கு முன்பாகவே இந்தியா மனிதநேய அடிப்படையில் உலக நாடுகளுக்கு உதவி வந்தது. பேரிடர் நிவாரண உதவிகளை வழங்கி வந்தது.தற்போது கொரோனா தடுப்பூசி மருந்தையும் வழங்கி வருகிறது.

இது உலகம் ஒரே குடும்பம் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.சர்வதேச ஒத்துழைப்பால் இந்தியா தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளது. சர்வதேச ஒத்துழைப்பு ஒரு வழிப் பாதை அல்ல. ஒருவருக்கு ஒருவர் கொடுத்துப் பெறுவது.இந்தியா இதுவரை 90 நாடுகளுக்கு 651 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசி மருந்தை வழங்கியுள்ளதில் இருந்து இதைப்புரிந்து கொள்ளலாம். ஒருவரைக் கூட தவிர்க்காமல் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.

உதயமாகும் சக்தி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது. இந்தியா அறிவார்ந்த சக்தியாக விளங்க விரும்புகிறது. அது அனைவருக்கும் வாசலை திறந்து வைத்துள்ளது. தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு மற்றவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதுதான் உண்மையான பன்முகத் தன்மைக்கான அடித்தளம்.இவ்வாறு அவர் பேசினார்.
 

தலைப்புச்செய்திகள்