Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதில் அரசு உறுதி - பிரதமர் மோடி தகவல்

ஏப்ரல் 15, 2021 07:36

புதுடெல்லி: நாடு முழுவதும் போதுமான அளவு தடுப்பூசி கிடைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாக கவர்னர்களுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் புதிய உச்சம் தொடும் வைரசின் வீரியத்தை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் மோடி தனிக்கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறார். இதற்காக அவர் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், மாநில முதல்-மந்திரிகளுடன் என அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த வரிசையில் நேற்று மாநில கவர்னர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களின் கவர்னர்கள் பங்கேற்று, தங்கள் மாநிலங்களில் பாதிப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில் பேசும்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

10 கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற மைல்கல்லை வேகமாக எட்டிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. கடந்த 4 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி திருவிழாவில் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, புதிய தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் போதுமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்கச்செய்வதில் அரசு உறுதியாக இருக்கிறது.

கடந்த ஆண்டு வைரசை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பு சிறப்பாக இருந்தது. அதை இந்த ஆண்டும் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் சமூக குழுக்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு கவர்னர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

மாநில அரசுகளுடன் சமூக நிறுவனங்கள் தடையின்றி ஒத்துழைப்பதை உறுதி செய்ய கவர்னர்கள் தீவிரமாக செயல்படலாம். தங்கள் சமூக நெட்வர்க் மூலம் ஆம்புலன்ஸ், வெண்டிலேட்டர்கள், ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிகரிக்க முடியும். தடுப்பூசி, சிகிச்சை போன்றவை தொடர்பான செய்திகளை பரப்பி, ஆயுஷ் தொடர்பான பரிகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடனான சந்திப்புகள் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும்.

மக்கள் பங்கேற்பில் கவர்னர்கள் ஒரு முக்கிய தூணாக இருப்பதுடன், மாநில அரசுகளுடன் இணைந்தும், அரசை வழிநடத்தியும் கவர்னர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் மாநிலங்கள் தேசிய உறுதிப்பாட்டை வலுப்படுத்த முடியும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

தலைப்புச்செய்திகள்