Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கேரளாவில் வளர்ப்பு நாயை 4 கி.மீட்டர் தூரம் மொபட்டில் கட்டி இழுத்து சென்ற உரிமையாளர்

ஏப்ரல் 18, 2021 02:19

கொழிஞ்சாம்பாறை: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடக்கரையை சேர்ந்தவர் சேவியர் (வயது 44). இவர் வீட்டில் ஒரு நாய் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிய செருப்பு வாங்கினார். வாசலில் விட்டிருந்த அந்த புதிய செருப்பை நாய் கடித்து சேதப்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த சேவியர் தனது நண்பருடன் சேர்ந்து மொபட்டில் நாயை கட்டி இழுத்துச்சென்றார். கயிறு மூலம் தார் ரோட்டில் இழுத்து சென்றபோது நாய் அலறி சத்தம்போட்டது. ஒரு கட்டத்தில் மொபட்டை சேவியர் வேமாக ஓட்டினார். இதில் நாய் ஓடமுடியாமல் விழுந்தது. தார் ரோட்டில் தரதரவென 4 கி.மீட்டர் தூரம் ஈவு, இரக்கமில்லாமல் இழுத்துச்சென்றார். இதனால் நாயின் உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது.

இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து மொபட்டை வழிமறித்து தட்டிக்கேட்டனர். ஆனால் அவர் எனது நாய். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறி தொடர்ந்து நாயை இழுத்துச்சென்றார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் நாய் இழுத்துச்செல்லப்படும் காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பினர். இதைப்பார்த்த திருச்சூர் போலீஸ் சூப்பிரண்டு, மிருகவதை தடுப்பு அதிகாரி சாலிவார்மா ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க எடக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டனர். போலீசார் சேவியரை பிடித்து விசாரணை நடத்தியபோது பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் நாயை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன் என்றார்.

காயம் அடைந்த நாய்க்கு உடனே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. வளர்ப்பு நாயை மொபட்டில் கட்டி தரதரவென தார் ரோட்டில் 4 கி.மீட்டர் தூரம் இழுத்துச்சென்ற சேவியர் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக போலீசார் கூறினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோன்று வளர்ப்பு நாயை அதன் உரிமையாளர் காரில் கட்டி இழுத்துச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்