Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றாக குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பினார்

ஏப்ரல் 20, 2021 06:35

சென்னை: தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு குடல் இறக்க அறுவை சிகிச்சை செய்து குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பினார்.  
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று காலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவருக்கு குடல் இறக்கம் நோய்  இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. 
இதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதற்கு உடனே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்தார். இதை தொடர்ந்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து ‘லேப்ராஸ்கோப்’ கருவி மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சில மணி நேரத்தில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. 
மயக்கம் தெளிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறிது நேரம் ‘வலி’ தெரிந்தது. அதன்பிறகு அவரது உடல் நிலை சீராக தொடங்கியது. அவரை அருகில் இருந்து மனைவி மற்றும் குடும்பத்தினர் கவனித்துக் கொண்டனர். ஆனாலும் டாக்டர்கள் அவரை ஒரு நாள் ஆஸ்பத்திரியில் இருக்குமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் நேற்று ஆஸ்பத்திரியில் தங்கினார். 
இன்று காலையில் எழுந்ததும் அவர் நன்றாக குணம் அடைந்திருந்ததால் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் அடையாற்றில் உள்ள அரசு வீட்டுக்கு திரும்பினார். 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுக்குமாறு டாக்டர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்