Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்துக்கு மேலும் 6 லட்சம் கொரோனா தடுப்பூசி- பொது சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்

ஏப்ரல் 20, 2021 06:39

சென்னை: தமிழகத்துக்கு மேலும் 6 லட்சம் கொரோனா தடுப்பூசி வருகிறது என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். 
தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி 4 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருந்தது. நேற்று காலை முதல் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. 
இந்த நிலையில் தமிழகத்துக்கு இதுவரை 55 லட்சத்துக்கும் மேல் கொரோனா தடுப்பூசி மருந்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசி மருந்து கேட்டு தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தியது. அதன் விளைவாக தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி இன்று (செவ்வாய்க்கிழமை) வரவுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:- 
தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடும் முயற்சியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. நாள் ஒன்றுக்கு 2 லட்சத்துக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் சுகாதாரத்துறை செய்துள்ளது. மருத்துவ பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். 
எனவே பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) காலை நிலவரப்படி 4 லட்சம் ‘டோஸ்’ தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இருந்தது. நேற்று காலை முதல் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) ஏறத்தாழ 3 லட்சம் தடுப்பூசிக்கும் மேல் கையிருப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
இந்த நிலையில் உடனடியாக தமிழகத்துக்கு தடுப்பூசி வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தினோம். அதன் விளைவாக தமிழகத்துக்கு கூடுதலாக 6 லட்சம் ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி அளவில் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறது. அதைத்தொடர்ந்து 11.30 மணி அளவில் மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு அந்த தடுப்பூசிகள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்