Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது

ஏப்ரல் 21, 2021 11:40

சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்று பிப்ரவரி மாதம் முதல் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. தொற்று பாதிப்புக்கு மாணவர்கள் ஆளாகக்கூடாது என்பதற்காக 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களுக்கு அதற்கான தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு மே 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. 12-ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மாநில அளவில் அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்தது.

மாணவர்களின் உயர்கல்விக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் அவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.இதனை தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை செய்வதாக செய்திகள் வெளியாகின.இது தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பம் அடையச்செய்துள்ளது.

மீண்டும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை அந்தந்த பள்ளிகளே நடத்தி மதிப்பெண் வழங்கலாம் என தகவல் வெளியாகின.இந்த தகவல் தமிழகம் முழுவதும் நேற்று வாட்ஸ் அப் மூலம் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் மாணவர்கள் கலக்கம் அடைந்தனர்.அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த மாணவர்கள் மீண்டும் தேர்வு நடைபெறும் என்ற தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மன அழுத்ததிற்கு ஆளாகினர்.இந்த நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் அளித்த விளக்கம் வருமாறு:-

தமிழக பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.கொரோனா பாதிப்பு காரணமாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பள்ளிகள் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர். இது அரசின் கொள்கை முடிவு. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட முடியாது என்று தெரிவித்தது.

மாணவர்களின் திறமையை பரிசோதித்துக்கொள்ள பள்ளிகளில் நுழைவுத்தேர்வோ அல்லது தேர்வோ நடத்திக் கொள்ளலாம் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.அதனால் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அரசு அறிவித்தபடி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அவர்களுக்கு தேர்ச்சி என்று மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழில் மதிப்பெண் இடம்பெறாது. எனவே எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மீண்டும் பொதுத்தேர்வு கிடையாது.சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த ஆலோசனைகள் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்துள்ளது. அதனால் மதிப்பெண் கொடுப்பதற்காக தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். இது தவறுதலாக புரியப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.அந்த அறிவிப்பு தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும் 10-ம் மாணவர்களுக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்