Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவின் 2-வது அலை, மோடி ஏற்படுத்திய பேரழிவு - மம்தா சாடல்

ஏப்ரல் 22, 2021 07:51

கொல்கத்தா:இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை, மோடி ஏற்படுத்திய பேரழிவு என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சூறாவளியாய் சுழன்றடிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தொற்றுக்கு ஆளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.இதைப்போல தடுப்பூசி தட்டுப்பாடுகளும் நிலவி வருவதாக பல மாநிலங்கள் தெரிவித்து உள்ளன.

இதனால் நாடு முழுவதும் சுகாதாரத்துறை பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது.இவ்வாறு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த பெரும் துயரத்துக்கு பிரதமர் மோடியே காரணம் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.தினாஜ்பூர் மாவட்டத்தின் பாலுர்கட்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் நேற்று உரையாற்றும்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மிகவும் வீரியமாக உள்ளது. இதை மோடி ஏற்படுத்திய பேரழிவு என்றுதான் நான் கூறுவேன். ஏனெனில் தடுப்பூசியோ, ஆக்சிஜனோ எங்கும் இல்லை. இந்த பொருட்களுக்கு நாட்டில் தட்டுப்பாடு இருந்தபோதும் வெளிநாடுகளுக்கு தடுப்பூசியும், மருந்துகளும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மேற்கு வங்காளத்தை காப்பாற்றவும், அதன் தாய்மார்களின் பெருமையை பாதுகாப்பதற்குமான போராட்டமே இந்த தேர்தல் ஆகும். நமது மாநிலம் ஒரு வங்காள என்ஜின் அரசால் நடத்தப்படும். மோடியின் இரட்டை என்ஜின் அரசால் அல்ல.நமது மாநிலத்தை குஜராத் கைப்பற்றவோ, டெல்லியில் இருந்து ஆளவோ அனுமதிக்கமாட்டோம். வங்காளத்தை வங்காளமே ஆளும்.

நாட்டில் கொரோனா தொற்றை கட்டு்ப்படுத்துவோம் என மத்திய அரசு கடந்த 7 மாதங்களுக்கு முன்பே கூறியது. ஆனால் தற்போது மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்காக வெளி மாநிலங்களில் இருந்து மக்களை அழைத்து வந்து, பா.ஜனதா இங்கு தொற்றை பரப்புகிறது.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை மையங்கள் அளிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில் ஏராளமான அரசு நிறுவனங்கள் மத்திய படைகள் தங்குவதற்கு அளிக்கப்பட்டு இருக்கின்றன.

குடியுரிமை திருத்தச்சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பா.ஜனதா பேசுகிறது. ஆனால் மேற்கு வங்காளத்துக்கு அகதியாக வந்த அனைவருக்கும் நில உரிமை வழங்கப்படும்.நீங்கள் அனைவரும் இந்த மாநிலத்தின் குடிமக்கள்.எனவே கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஒரு காவலாளியாக நான் இருப்பேன். தேர்தலில் காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம். ஏனெனில் அது பா.ஜனதாவின் கரத்தைத்தான் வலுப்படுத்தும் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்