Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலை தடுப்பது எப்படி? மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை

ஏப்ரல் 23, 2021 07:13

புதுடெல்லி: இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா தொற்று பரவலானது அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் மருத்துவமனைகள் திண்டாடி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம், மக்கள் இயங்குவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று நடந்த உயர்மட்டக்குழு ஆலோசனையின்போது, ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படி பிரதமர் உத்தரவிட்டார். இந்நிலையில், கொரோனா நிலவரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல் மந்திரிகளுடன் இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி ஆலோசனையை தொடங்கினார்.

தமிழகம் சார்பில் தலைமைச் செயலாளர்  ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம், வைரஸ் பரவலை தடுக்கும் வழிமுறைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதேபோல் மதியம் 12.30 மணியளவில் ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரித்து, தேவைப்படும் அளவிற்கு சப்ளை செய்யும்படி பிரதமர் கேட்டுக்கொள்வார்.

தலைப்புச்செய்திகள்