Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிகரித்து வரும் கரோனா இந்தியவிலிருந்து பயணிகள் விமானம் வர 30 நாட்களுக்குத் தடை: கனடா அதிரடி உத்தரவு

ஏப்ரல் 23, 2021 09:43

அதிகரித்து வரும் கரோனா வைரஸைக் கருத்தில் கொண்டு, இந்தியா, பாகிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் அடுத்த 30 நாட்களுக்கு வருவதற்குத் தடை விதித்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக கனடா அரசு பிறப்பித்த நீண்ட நாட்கள் தடையாக இது அமைந்துள்ளது. அதேசமயம், சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையையும் கனடா அரசு விதிக்கவில்லை.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்தியாவிலிருந்து யாரும் வருவதற்கு ஏற்கெனவே தடை விதித்துள்ள நிலையில், தற்போது அதில் கனடாவும் சேர்ந்துள்ளது. கனடா போக்குவரத்துத் துறை அமைச்சர் அல்காப்ரா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் கனடா வர 30 நாட்கள் தடை விதிக்கப்படுகிறது. இந்தத் தடை இன்று நள்ளிரவு முதல் அமலாகும். ஒரு தனிப்பட்ட நாட்டுக்கு எதிராக நீண்ட காலத்தில் கனடா தடை விதித்துள்ளது.

இந்தியாவில் உள்ள கரோனா வைரஸ் சூழலை ஆய்வு செய்து, கனடா மருத்துவ அதிகாரிகள் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சரக்குப் போக்குவரத்து விமானத்துக்குத் தடையில்லை. இந்தியா 15 லட்சம் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகளை எங்களுக்கு அனுப்பும் என்று நம்புகிறோம்''.

இவ்வாறு அல்காப்ரா தெரிவித்தார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அங்கிருந்து பயணிகளை கனடா தாராளமாக அனுமதிப்பது குறித்து அங்குள்ள எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் (பழமைவாதக் கட்சி) முன்னதாகக் கேள்வி எழுப்பியது. உடனடியாக கனடா எல்லைகளை மூட வேண்டும், இந்தியாவிலிருந்து பயணிகள் வரத் தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதைத் தொடர்ந்து கனடா அரசு இந்தத் தடையை விதித்துள்ளது.

கனடாவின் பொது சுகாதாரத் துறை அமைப்பின் தலைவர் மருத்துவர் தெரஸா டாம் அறிவுரையின்படியும் இந்த நடவடிக்கையை கனடா அரசு எடுத்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் சென்றவர்களில் 50 சதவீதம் பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கனடா அரசின் புள்ளிவிவரங்கள்படி, ஏப்ரல் 7 முதல் 18-ம் தேதி வரை 121 சர்வதேச விமானங்கள் வந்துள்ளன. இதில் குறைந்தபட்சம் ஒரு பயணிக்கு கரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதிலும் இந்தியாவிலிருந்து வந்தவர்களில் 32 பேருக்கு கரோனா தொற்று குறிப்பாக உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் தொற்று இருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை கனடா அரசு விரைந்து எடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்