Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2,230 படுக்கைகளுடன் 8 இடங்களில் கொரோனா ‘கேர் சென்டர்’

ஏப்ரல் 24, 2021 06:17

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் தினமும் 220 முதல் 250 பேருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இதையடுத்து 8 இடங்களில் கொரோனா கேர் சென்டர் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி 2,230 படுக்கை வசதிகளுடன் ‘கேர் சென்டர்’ தயாராகி வருகிறது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 190 ஆக இருந்த படுக்கை வசதி 253 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 398 ஆக இருந்த படுக்கை வசதி 448 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 331 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையங்கள் இயங்கின. தற்போது 510 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று பாதித்தவருக்கு, மூச்சுவிட சிரமம் ஏற்படுவதால் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிக்கின்றனர். அதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதியும் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில், 222 படுக்கை, தனியார் மருத்துவமனைகளில் 156 படுக்கை என 378 படுக்கைகள் ‘ஆக்சிஜன்’ வசதியுடன் தயார் நிலையில் உள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அபாய கட்டத்தை எட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வசதியாக, அவசர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில், 137 படுக்கைகளுடன், அவசர சிகிச்சை பிரிவும் தயார்நிலையில் உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 785, தாராபுரம் மகாராணி கல்லூரி -65, ‘நிப்ட்டி’ கல்லூரி -250, ஐ.கே.எப்., -200, உடுமலை அரசு கல்லூரி - 100, பல்லடம் அரசு கல்லூரி -350, ஏஞ்சல் கல்லூரி -250, மகாராஜா கல்லூரி -230 என 2,230 படுக்கை வசதிகளுடன் கொரோனா ‘கேர் சென்டர்’ அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில், மாவட்டத்தில், அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் 8 இடங்களில் 2,230 படுக்கை வசதிகளுடன் கொரோனா ‘கேர் சென்டர்’ அமைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். 48 மணி நேரத்துக்குள் அனைத்து கொரோனா கேர் சென்டர்களும் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றார். 

தலைப்புச்செய்திகள்