Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தொழிற்சாலைகள் இயங்க எந்த தடையும் இல்லை

ஏப்ரல் 25, 2021 12:35

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அறிவித்து இருந்த நிலையில் நேற்று மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடம், மது பார்கள், மனமகிழ்ச்சி மன்றங்கள், வணிக வளாகங்கள், மால்கள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவையும் செயல்பட கூடாது என அறிவித்துள்ளனர்.

புதுச்சேரியை தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்களும், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களும் கட்டாயமாக இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வார இறுதி நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி முதல் ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்பட்டது.

பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டாலும் தொழில் உற்பத்தி துறையில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. அது பாதிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகள் ஏற்படும். மேலும் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு விடும். எனவே அதை கருத்தில் கொண்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள் வழக்கம் போல செயல்படலாம். அதே நேரத்தில் வீட்டில் இருந்து பணிபுரிய வாய்ப்பு இருந்தால் 50 சதவீத ஊழியர்களை வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். தொழிலாளர்கள் தொடர்ந்து வேலைக்கு வர எந்த இடையூறும் ஏற்பட கூடாது என்பதற்காக அவர்கள் அடையாள அட்டை காட்டினால் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொழிற் சாலைகள் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை. எனவே வழக்கம் போல உற்பத்திகள் இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா விதிகளை சரியாக பின்பற்றி நோய் தொற்றை தடுக்க வேண்டும் என்றும் தொழிற்சாலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்