Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி - அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிப்பு

ஏப்ரல் 26, 2021 10:07

டெல்லியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக 1.34 கோடி டோஸ் தடுப்பூசி வாங்குவதற்கு முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தெரிவித்தார். மே 1-ம் தேதி முதல் 18 வயது முதல் 45 வயதுள்ள மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மத்திய அரசின் இலவசத் தடுப்பூசி இருக்கும். 18 வயது முதல் 45 வயது வரை உள்ள பிரிவினரும், தனி நபர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, அனைத்து மக்களுக்கும் இலவசத் தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஏற்கெனவே, மகாராஷ்டிரா, ஹரியாணா, கர்நாடகா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும் என அறிவித்துள்ளன. இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்த டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக 1.34 டோஸ் தடுப்பூசிகள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் மருந்துகளைக் கொள்முதல் செய்துவிடுவோம். மருந்துகள் வந்தவுடன் மக்களுக்குச் செலுத்தும் ஏற்பாடுகள் தொடங்கும்.

தகுதியுள்ள மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாவது மிகக் குறைவுதான். அவ்வாறு பாதிக்கப்பட்டாலும் உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தடுப்பூசிக்கு ஒரு நிறுவனம் ரூ.400 விலை வைக்கிறது. மற்றொரு நிறுவனம் ரூ.600 விலை வைக்கிறது. ஆனால், மத்திய அரசுக்கு இரு நிறுவனங்கள் அளிக்கும் தடுப்பூசிக்கு மட்டும் ஒரே மாதரியாக ரூ.150 விலை வைக்கிறார்கள்.

தடுப்பூசி விலையை இரு நிறுவனங்களும் குறைக்க வேண்டும். ஒரே மாதிரி விலை வைக்க வேண்டும். மக்களுக்குப் பயன்பெறும் இந்தத் தடுப்பூசிக்கு ஒரேமாதிரியான விலை வைக்க வேண்டும். மக்கள் உயிருக்குப் போராடி வரும் இந்த நேரம், தடுப்பூசி நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க உகந்த நேரம் அல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரம்''. இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்