Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா நோயாளிகளுக்கு உதவ வாழ்நாள் முழுவதும் சம்பாதித்த பணத்தை வழங்கிய மாற்றுத் திறனாளி

ஏப்ரல் 27, 2021 06:43

கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. அதற்கான செலவுக்கு முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு பலரும் பணம் அனுப்புகின்றனர். அதை அறிந்த கண்ணூர் மாவட்டம், குருவா பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர், அந்தப் பகுதியில் இருக்கும் வங்கிக்கு சென்றார். பிறவியிலேயே இரு காதுகளும் கேட்காத அவர், தன் வங்கிக் கணக்கில் இருந்த 2 லட்சத்து 850 ரூபாயில், 2 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு மாற்றினார். அவரது கணக்கில் வெறும் 850 ரூபாய் மீதம் உள்ளது.

பீடி சுற்றும் தொழில் செய்யும் ஏழை தொழிலாளி ஜனார்த்தனன் தன் வாழ்நாள் முழுவதுமாக சேர்த்த பணத்தை வழங்கியுள்ளார். இதைப் பற்றி அந்த வங்கியில் வேலை செய்யும் அதிகாரி ஒருவர் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட ஜனார்த்தனின் சேவை குணம் அதன் பின்பே வெளியுலகுக்கு தெரிய வந்தது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, இச்சம்
பவத்தை சுட்டிக்காட்டி கேரள மக்களின் உணர்ச்சிப் பெருக்கை காட்டுவதாக சிலாகித்தார்.

இதுகுறித்து இந்து தமிழ் நாளிதழிடம் ஜனார்த்தனன் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு என்மனைவி இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். நான் 13 வயதில் இருந்தே பீடி சுற்றி வாழ்க்கையை நடத்துகிறேன். அதில்தான் 2 லட்சம் ரூபாய் சேர்த்து இருந்தேன். என் சகோதர, சகோதரிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது என் வங்கிக் கணக்கில் பணத்தை வைத்திருப்பதில் என்ன இருக்கிறது? அதனால்தான் கொடுத்து விட்டேன். நான் வாழ்க்கை நடத்த அரசாங்கம் மாதம் 1,600 ரூபாய் மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் வழங்குகிறது. பீடி சுற்றும் தொழில் இருக்கிறது. எனக்கு அது போதும்’’’ என்று தெரிவித்தார்.

கொல்லம், பள்ளித்தோட்டம் பகுதியில் தேநீர் கடை நடத்தி வரும் சுபைதா, ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கரோனாவின் இரண்டாவது அலையின் தீவிரத்தை உணர்த்த சுபைதா, தான் வளர்த்து வரும் ஆடுகளில் ஒன்றை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக விற்பனை செய்தார். கொல்லம் மாவட்ட ஆட்சியர் அப்துல் நாசரை சந்தித்த சுபைதா, ஆடு விற்ற பணத்தில் 5 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு கொடுத்தார். ஆடு விற்றதில் தன்வசம் மிச்சம் இருக்கும் பணத்தில் 30 ஏழைக் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும் வாங்கி விநியோகித்தார். இதயநோயாளியான தன் கணவரின் மருத்துவச் செலவையும், குடும்ப பொருளாதாரத்தையும் தாங்கிப் பிடிக்கும் சுபைதா, ஆட்டை விற்று முதல்வர் நிவாரண நிதிக்கு கரோனாவின் முதல் அலையின் போதும் பணம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்