Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவர், செவிலியர்களுக்கு இலவச விமான பயணம்: விஸ்தாரா ஏர்லைன்ஸ் அறிவிப்பு

ஏப்ரல் 28, 2021 05:43

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவர்களும் செவிலியர்களும் தன்னலமின்றி சேவையாற்றி வருகின்றனர். அவர்களை கவுரவிக்கும் வகையில் டாடா குழுமத்தைச் சேர்ந்த விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், இலவச பயண திட்டத்தை அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் சார்பில் மத்திய விமான போக்குவரத்துத் துறை இணைச் செயலாளர் உஷாபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில்,"கரோனா வைரஸ் தடுப்பு பணியில் நாட்டுக்கு சேவையாற்றி வருகிறோம். கரோனா சிகிச்சைக்கான மருந்து, உபகரணங்களை கொண்டு சேர்ப்பதில் உதவி செய்துவருகிறோம். சரக்கு பெட்டக இடவசதியின் அடிப்படையில் தொடர்ந்து உதவ காத்திருக்கிறோம். அத்துடன் அரசு, அரசுஅங்கீகாரம் பெற்ற மருத்துவர்களையும், செவிலியர்களையும் அவர்களது பணியின் காரணமாக உள்நாட்டுக்குள் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கிறோம்’’ என தெரிவிக்கப்பட் டுள்ளது.

நாடு முழுவதும் இயக்கப்படும் விஸ்தாரா விமானங்களில் குறைந்த இடங்களே இருப்பதால் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக nationalrelief@airvistara.comஎனும் மெயிலில் தேவையான ஆதாரங்களை இணைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் முன்கூட்டியே தங்களது பயணத்தை பதிவு செய்ய வேண்டும். முதலில்வருபவர்களுக்கு முன்னுரிமைவழங்கப்படும். மருத்துவ உபகரணங்களை அனுப்ப நிறுவனத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.இந்த தகவல்கள், விஸ்தாராவின் விளம்பர நிறுவனமான ஏவியான் மூலமாக ‘இந்து தமிழ்’நாளேட்டிடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசு அமைப்புகள், அரசு மருத்துவமனைகளின் உபகரணங்களை கொண்டு செல்ல விஸ்தாரா உதவுகிறது. அதோடு அரசுமருத்துவர்கள், செவிலியர்கள் உள்நாட்டில் இலவசமாக பயணம்செய்ய சிறப்பு சலுகை வழங்கியுள்ளது. விஸ்தாராவின் பெருந்தன்மையை பாராட்டுகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்