Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இங்கிலாந்து அனுப்பிய மருத்துவ சாதனங்கள், டெல்லி வந்து சேர்ந்தன

ஏப்ரல் 28, 2021 06:48

புதுடெல்லி: கொரோனா தொற்றால் அவதியுற்று வருகிற இந்தியாவுக்கு இங்கிலாந்து உதவிக்கரம் நீட்டி உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து தனது முதல் முக்கிய உதவியாக 100 வென்டிலேட்டர்களையும், 95 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.  அவை நேற்று அதிகாலையில் டெல்லி வந்து சேர்ந்தன.

இதையொட்டி வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “சர்வதேச ஒத்துழைப்பு கிடைக்கிறது. இங்கிலாந்தில் இருந்து 100 வென்டிலேட்டர்கள், 95 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட முக்கிய மருத்துவ உதவி வந்து சேர்ந்திருப்பதை பாராட்டுகிறோம்” என கூறி உள்ளார். அவை டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கியதை காட்டும் படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு 700 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்புவதாக அயர்லாந்து அறிவித்துள்ளது. இதையொட்டி டெல்லியில் உள்ள அதன் தூதரகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி அளிக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உதவுவதற்காக அயர்லாந்து 700 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அனுப்புகிறது. இவை புதன்கிழமை காலை (இன்று) இந்தியா வந்தடையும்” என கூறப்பட்டுள்ளது.

அயர்லாந்து தூதர் பிரெண்டர் வார்டு கூறுகையில், “இந்திய அரசுடன் அயர்லாந்து நெருங்கிய தொடர்பில் இருக்கிறது. கொரோனாவை கையாள கூடுதல் உதவிகளை செய்வதற்கு அயர்லாந்து எதிர்நோக்குகிறது” என தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்