Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியின் சித்தி கரோனா தொற்றால் காலமானார்

ஏப்ரல் 28, 2021 09:19

நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்திலும் நாள்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் அங்கு உயிரிழந்தனர்.

பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபென் மோடி அகமதாபாத்தில் உள்ள நியூ ராணி பகுதியில் வசித்து வந்தார். நர்மதாபென் மோடிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பிரஹலாத் மோடி கூறுகையில், “ எங்களுடைய சித்தி நர்மதாபென் மோடிக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில் இன்று உயிரிழந்தார். நர்மதாபென் கணவரும், எங்கள் தந்தை தாமோதர் தாஸின் சகோதரருமான ஜக்ஜீவன்தாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார்” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. ஜோதிர்ஆதித்யா சிந்தியா ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், “ பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி நர்மதாபென் மோடி காலமானதற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருளட்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மன வலிமையை வழங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்