Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2020-ல் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் இந்தியா மூன்றாவது இடம்

ஏப்ரல் 29, 2021 08:26

கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவை தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ உள்ளது. உலகளாவிய ராணுவ செலவினம் மற்றும் ஆயுத வர்த்தகத்தை இந்த நிறுவனம் கண்காணித்து வருகிறது. உலக நாடுகளின் ராணுவ செலவினம் தொடர்பான இதன் சமீபத்திய அறிக்கை நேற்று முன்தினம் வெளியானது.

இதன்படி கடந்த 2020-ம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட நாடுகளில் அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. உலக நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ செலவில் அமெரிக்காவின் பங்கு 39 சதவீதமாக உள்ளது. இதையடுத்து சீனாவின் பங்கு 13 சதவீதமாகவும் இந்தியாவின் பங்கு 3.7 சதவீதமாகவும் உள்ளது.

அமெரிக்கா தனது ராணுவத்துக்கு கடந்த 2020-ல் 77,800 கோடிடாலர் செலவிட்டுள்ளது. சீனா25,200 கோடி டாலரும் இந்தியா7,290 கோடி டாலரும் செலவிட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டில்கரோனா வைரஸ் பரவல் இருந்தாலும் இந்த 3 நாடுகளும் முந்தையை ஆண்டை விட கூடுதலாக ராணுவத்துக்கு செலவிட்டுள்ளன. அமெரிக்கா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 3.7 சதவீதத்தை ராணுவத்துக்கு செலவிட்டுள்ளது. சீனா 1.7 சதவீதமும் இந்தியா 2.9 சதவீதமும் செலவிட்டுள்ளன.

2011 முதல் 2020 வரை அமெரிக்க ராணுவ செலவு 10 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் சீனாவின் ராணுவ செலவு 76 சதவீதமும் இந்தியாவின் ராணுவ செலவு 34 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

உலகில் ராணுவத்துக்கு அதிகம்செலவிட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. 2020-ல் உலக நாடுகளின் மொத்த ராணுவ செலவு முந்தைய ஆண்டை விட 2.6 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 5 நாடுகளின் ராணுவ செலவு, மொத்த ராணுவ செலவில் 62 சதவீதமாக உள்ளது.
 

தலைப்புச்செய்திகள்