Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனாவை எதிர்த்து போராட வேதாந்தா நிறுவனம் ரூ.150 கோடி உதவி

ஏப்ரல் 30, 2021 05:47

மும்பை :தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட உலக நாடுகளில் உலோக தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு கொரோனா பரவலின் போது அதை எதிர்த்து போராட வேதாந்தா குழுமம் சார்பில் ரூ.201 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டது. தற்போது 2-வது அலையின் தாக்கத்தையும், விலைமதிப்பற்ற உயிர்களையும் இழந்ததை கண்டு நான் மிகுந்த கவலையும், வேதனையும் அடைகிறேன். எனவே வேதாந்தா குழுமம் ரூ.150 கோடி செலவில் 2-வது கொரோனா அலையை எதிர்த்து போராட மத்திய, மாநில அரசுகளுடன் கைகோர்த்து செயல்பட உள்ளது.

டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, சத்தீஷ்கர், ஜார்கண்ட், கோவா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ள 10 நகரங்களில் கொரோனா அவசர சிகிச்சைப்பிரிவை தொடங்கி உள்ளோம். தற்போது 700 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது 1,000 படுக்கை வசதிகளாக உயர்த்தப்படும். மேலும் டாக்டர்கள், சுகாதார ஊழியர்களுக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும். எங்களது ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கி வருகிறோம். ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்து கொடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இந்த ஆலை மூலம் தினமும் 1,000 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த கடினமான தருணத்தில் அரசு மற்றும் மக்களுடன் வேதாந்தா குழுமம் துணை நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்