Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

18 வயதானோருக்கு 1-ந்தேதி முதல் தடுப்பூசி: ஒரே நாளில் 1.33 கோடி பேர் முன்பதிவு

ஏப்ரல் 30, 2021 05:50

புதுடெல்லி: இந்தியாவில் ஜனவரி 16-ந்தேதி முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த நிலையில் 3-ம் கட்டமாக 18 வயதான அனைவருக்கும் மே 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை நேரடியாக தடுப்பூசி மையத்துக்கு வந்து 18 வயதானோர் போட்டுக்கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான 18 வயதானவர்கள் கோவின் தளத்தில் அல்லது ஆரோக்கியசேது செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த முன்பதிவு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு தொடங்கியது.

நாடு முழுவதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இளைஞர்களும், இளம்பெண்களும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கிய உடனேயே அவர்கள் முன்பதிவு செய்யத்தொடங்கி விட்டனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் ஓ.டி.பி. என்னும் ஒரே நேர கடவுச்சொல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஆனாலும் காத்திருந்து இளையதலைமுறையினர் பதிவு செய்தனர்.

இந்த வகையில் முதல் நாளில் முன்பதிவு தொடங்கிய முதல் ஒரு மணி நேரத்தில் 35 லட்சம் பேரும், 3 மணி நேரத்தில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவு செய்துவிட்டனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. 24 மணி நேரத்தில் 1.33 கோடிப்பேர் இப்படி முன்பதிவு செய்துள்ளனர் எனவும், இந்தியாவில் 18-44 வயதினர் 59.46 கோடிப்பேர் இருக்கின்றனர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

தலைப்புச்செய்திகள்