Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக தேர்தல் முடிவுகள்... மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை

மே 02, 2021 06:24

சென்னை: தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர்.

மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது. 

தற்போதைய நிலவரப்படி மொத்தம் 231 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது.  இதில், மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை விட அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி 132 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 99 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. 

மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதேபோல் அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் பல்வேறு அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர். 

தலைப்புச்செய்திகள்