Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தனி மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சியை பிடிக்கிறது... முதலமைச்சராகிறார் மு.க.ஸ்டாலின்

மே 03, 2021 04:43

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு பல்வேறு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்ததேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது. இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.
 
மதிய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. திமுக மட்டும் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.

அதன்பின்னர் மேலும் சில தொகுதிகளில் அதிமுக பின்தங்கியது. திமுக மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் (கோவை தெற்கு-கமல்) தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின. 

தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார். 

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்