Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 லட்சம் பேர் காத்திருப்பு

மே 03, 2021 07:10

சென்னை: தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. 45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 2-வது தவணை தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சுகாதாரத்துறையினர், காவல்துறை, உள்ளாட்சித்துறை, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள இணை நோய் பாதிப்புள்ளவர்கள் என படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்கள் இணையதளத்தில் தடுப்பபூசிக்காக பதிவு செய்தனர். இதற்கு தேவையான தடுப்பூசிகளை மாநிலங்களே கொள்முதல் செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, 1.50 கோடி தடுப்பூசிகளுக்கு தமிழக அரசு ஆர்டர் செய்தது. ஆர்டர் செய்த தடுப்பூசிகள் வராததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி திட்டமிட்டபடி மே 1-ந்தேதி தொடங்கப்படவில்லை. இதற்கிடையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்காக இதுவரை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பிய 72.85 லட்சம் தடுப்பூசிகளில் 60 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வீணாகியது போக, ஒரு வாரத்துக்கு தேவையான சுமார் 6 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன. இதனால் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ள சுமார் 45 லட்சம் பேர் 2-வது தவணை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தமிழக அரசு ஆர்டர் செய்துள்ள 1.50 கோடி தடுப்பூசிகள் வந்ததும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். மேலும், மத்திய அரசிடம் இருந்தும் இன்னும் கூடுதலாக தடுப்பூசிகள் வரவுள்ளன” என்றனர்.
 

தலைப்புச்செய்திகள்