Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டன

மே 04, 2021 05:37

சென்னை: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் காலி செய்யப்பட்டன. புதிய முதல்-அமைச்சருக்கான அறை தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை அமைந்தது. அதைத்தொடர்ந்து தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் தங்களுக்கான அறைகளை தேர்வு செய்து அமர்ந்தனர்.

5 ஆண்டுகள் முடிவில் 2016-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அமைச்சர்கள் ஒரு சிலர் மட்டுமே மாற்றப்பட்டு மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்தது. இந்த நிலையில் 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்தார். அதைத்தொடர்ந்து அதே அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை, முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைந்தது.

அதன் பின்னர் அரசியல் நெருக்கடி காரணங்களால் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சரானார். அவர் தலைமையில் அதே அமைச்சர்களை கொண்ட அமைச்சரவை அமைந்தது.

இந்த நிலையில் 5 ஆண்டுகள் நிறைவடைந்து இந்த ஆண்டு மீண்டும் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. எனவே கடந்த 10 ஆண்டுகளாக தலைமைச் செயலகத்தில் கோலோச்சி வந்த அ.தி.மு.க. தற்போது அந்த இடத்தை காலி செய்யும் சூழ்நிலை எழுந்துள்ளது.

பொதுவாக, அமைச்சர்கள் பதவி ஏற்றதும் தங்களின் அறையில் புதிய பெயர் பலகை, பீரோ, மேஜைகள், இருக்கைகள் ஆகியவற்றை போட்டுக் கொள்வார்கள். அதோடு, கட்சித் தலைவர்களின் படங்களை சுவர்களில் மாட்டி அறையை அலங்கரிப்பார்கள். தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றதை தொடர்ந்து அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவருமே தங்களின் அறைகளை நேற்று காலி செய்தனர். இதற்காக ஆட்களையும், வாகனங்களையும் தலைமைச்செயலகத்துக்கு அனுப்பினர்.

அந்த வாகனங்களில் அவர்களுக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் ஏற்றப்பட்டு வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் படங்களும் அடங்கும்.

அதோடு, அமைச்சர்களின் அறைகளுக்கு வெளியே தொங்கவிடப்பட்டிருந்த பெயர்ப்பலகைகளும் அகற்றப்பட்டன. அந்தப்பலகையில், அமைச்சரின் பெயர், துறையின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அந்த பலகைகளில் எழுதப்பட்டிருந்த அமைச்சரின் பெயர்கள் மட்டும் அழிக்கப்பட்டன. துறையின் பெயர் அதில் அப்படியே விடப்பட்டுள்ளது.

அமைய இருக்கும் தி.மு.க. அரசில் அந்த துறைக்கு புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சரின் பெயர் மட்டும் அந்தப்பலகையில் எழுதி, அவரது அறைக்கு வெளியே மாட்டப்படும். அதுபோல தலைமைச்செயலகத்தின் பல்வேறு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமியின் படங்கள் அகற்றப்பட்டுவிட்டன. எடப்பாடி பழனிசாமி அறை வெளியே தொங்கவிடப்பட்டிருந்த, முதல்-அமைச்சர் என்ற பெயர்ப்பலகை நேற்று வரை அகற்றப்படவில்லை.

மற்றபடி, அந்த அறை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. புதிய முதல்-அமைச்சரை வரவேற்கும் வகையில் தலைமைச்செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
 

தலைப்புச்செய்திகள்