Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் குவிந்துள்ள செவிலியர்கள்: கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு

மே 06, 2021 07:09

சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1,212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தற்போது அதிகரித்து வரும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக மருத்துவ பணியாளர்களின் தேவை அதிகரித்துள்ளது. மறுபுறம் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என செவிலியர்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்த 1,212 செவிலியர்களையும் நிரந்தர பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான உத்தரவு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தங்களுக்கு வழங்கப்பட்ட நிரந்தர பணி ஆணையுடன் செவிலியர்கள் அனைவரும் 10 ஆம் தேதிக்குள் சென்னைக்கு வர வேண்டும். பின்னர், தேவை அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை கீழ்பாகத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஏராளமான செவிலியர்கள் வந்து குவிந்துள்ளனர். அவர்களுக்கு தகுந்த தகவல் சொல்வதற்கு கூட யாரும் இல்லாததால் செய்வதரியாது நின்று கொண்டிருப்பதாக தெரிகிறது. 

கொரோனா 2ம் அலை அதிகரித்து வரும் இந்த நிலையில் ஒரே இடத்தில் சுமார் 1000 பேருக்கு மேல் கூடியுள்ளனர். கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இவர்கள் வந்திருக்கிறார்கள். எந்தவிதமான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. 

தலைப்புச்செய்திகள்