Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

2 மாதங்களுக்கு 5 கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்

மே 06, 2021 09:09

புதுடெல்லி: கொரோனா பரவலால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 2 மாதங்களுக்கு தலா 5 கிலோ இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. நாட்டில் கொரோனாவின் 2-வது அலை மிகுந்த வீரியத்துடன் பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் மடிந்தும் வருகின்றனர்.

மறுபுறம் நாட்டின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறது. கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்களின் வாழ்வாதாரமும் பலத்த அடிவாங்கி வருகிறது. எனவே நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகள் சுமார் 79.88 லட்சம் பேருக்கு 2 மாதங்களுக்கு அதாவது மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இந்த திட்டத்துக்கு, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதாவது பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் 3-ம் கட்டத்தின் கீழ் 79.88 கோடி பேருக்கு தலா 5 கிலோ உணவு பொருட்களை 2 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதன்படி, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான, கோதுமை அல்லது அரிசி ஒதுக்கீட்டு அளவை உணவு மற்றும் பொது வினியோகத்துறை தீர்மானிக்கும். மேலும், உள்ளூர் பொது முடக்க சூழல்கள், மோசமான வானிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை அனுப்பும் அல்லது வினியோகிக்கும் கால அளவை நீட்டிப்பது குறித்தும் இந்த துறை முடிவெடுக்கும்.

இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட உள்ள உணவு தானியங்களின் உத்தேச அளவு 80 லட்சம் டன் ஆகும். இதற்கான மானியச்செலவு ரூ.25,332.92 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த தகவல்களை மத்திய அரசு அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், நெருக்கடிகளால் உணவு-தானியங்கள் கிடைக்காமல் எந்த ஏழை குடும்பமும் பாதிக்கப்படாது என்று கூறியுள்ள மத்திய அரசு, கொரோனாவால் ஏற்படும் பொருளாதார சீர்குலைவு காரணமாக ஏழைகள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை இந்த கூடுதல் ஒதுக்கீடு சரிசெய்யும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

தலைப்புச்செய்திகள்