Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3 மாநிலங்களில் நோய் பரவல் 10 நாட்களில் குறையும்- நிபுணர்கள் தகவல்

மே 07, 2021 11:01

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரமாக 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் இருந்து வருகிறது. சில நாட்களில் 4 லட்சத்தை தாண்டி இருக்கிறது. டெல்லி, மும்பை போன்ற வடமாநிலங்களில் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பாதிப்பு இன்னும் சில நாட்களில் வீழ்ச்சியை நோக்கி செல்லும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஐதராபாத், கான்பூர் ஐ.ஐ.டி மற்றும் உலக அளவில் கணிப்புகள் அடிப்படையில் பார்க்கும் போது மகாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப்பில் இன்னும் 5-ல் இருந்து 10 நாட்களுக்குள் நோய் பரவல் குறைய தொடங்கி விடும் என்று தெரியவந்துள்ளது. மே 14 தேதியிலிருந்து 18-ந்தேதிக்குள் 3லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 4 லட்சத்து 80 ஆயிரம் வரை பரவல் இருக்கலாம். இதுதான் 2-வது அலையின் உச்சமாக இருக்கும் பின்னர் படிப்படியாக குறைந்து விடும் என்று அவர்கள் கூறியிருகிறார்கள்.

3 மாநிலங்களில் நோய் பரவுதல் குறைந்து விடும் என எதிர்பார்ப்பதால் நோய் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்த இருக்கிறார்கள். இந்த மாநிலங்களில் வரும் வாரங்களில் தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோணி பவுச் கூறும் போது, இந்தியாவில் நாடு முழுவதும் முழு ஊரங்கு கொண்டு வந்தால்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தினால் இதில் பாதிப்பு ஏற்படும் என்பதால் முழு ஊரடங்கை மத்திய அரசு சிபாரிசு செய்யவில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

குறிப்பிட்ட மாநிலங்களில் நோய் பரவல் குறைவது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சில மாநிலங்களில் பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடித்தால் நோய் பரவலை தடுத்துவிட முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

தலைப்புச்செய்திகள்