Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இதற்கு 1.20 லட்சம் ரூபாயா...? அதிர்ச்சியடைய வைத்த ஆம்புலன்ஸ் பில்

மே 07, 2021 11:14

புதுடெல்லி: நாட்டில் கொரோனா தொற்றுநோயின் தாக்கம் குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார கட்டமைப்புகள் தொடர்ந்து போராடிவருகின்றன. இந்த நெருக்கடியான காலகட்டத்தில், துயரத்தில் தவிக்கும் சக மனிதர்களுக்கு தயக்கமின்றி உதவும் மனித நேயம் வளர்ந்துள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேசமயம், ஆங்காங்கே மனிதநேயமற்ற செயல்களும் அரங்கேறுகின்றன. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், கொரோனா நோயாளிகள் மற்றும் சாமானிய மக்களை ஏமாற்றும் முயற்சியில் சிலர் தொடர்ந்து ஈடுபடுவது கவலை
அளிப்பதாக உள்ளது. 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக உயர்ந்துள்ள நிலையில், போலி மருந்துகள், ஆக்சிஜன்
கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள், அதிர்ச்சியடைய வைக்கும் ஆம்புலன்ஸ் பில்கள் உள்ளிட்ட பல தகவல்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக
வெளிப்படுகின்றன. 

இந்நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரி பங்கஜ் நெய்ன், ஆம்புலன்ஸ் பில் ரூ.1.20 லட்சம் தொடர்பான ஒரு பதிவை தனது டுவிட்டரில் பகிர்ந்தார். ஒரு நோயாளியை
குர்கானில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து லூதியானாவில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக இந்த தொகை
கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த தகவலை பார்த்த டுவிட்டர்வாசிகள் தங்களின் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
வலியுறுத்தினர். மேலும் சிலர் தங்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் இதேபோன்று நேர்ந்ததாக கூறினர். 

உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்து ஏராளமான தகவல்கள் வந்த நிலையில், டெல்லி நிர்வாகம் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தை முறைப்படுத்தி உள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது
 

தலைப்புச்செய்திகள்