Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா கட்டுப்பாட்டு பகுதியில் மின் ஊழியர்கள் பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தல்

மே 09, 2021 07:10

கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் பணிபுரியும் மின் வாரிய ஊழியர்கள், பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசின் மின் துறை அமைச்சராக நேற்று முன்தினம் பொறுப்பேற்ற வி.செந்தில் பாலாஜி, தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், மின் வாரிய அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, "கரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருவதால், களப்பணியாற்றும் மின் ஊழியர்கள் மிகவும் பாதுகாப்புடன் பணிபுரியவேண்டும். குறிப்பாக, முகக்கவசம்,கையுறை அணிதல், கைகளை அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட அடிப்படை பாதுகாப்பு அம்சங்களை தவறாது கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த பாதுகாப்புடன் பணிபுரிய வேண்டும். தற்போது கோடைகாலம் என்பதால், மின்தடை ஏற்படாமல் தடுக்க வேண்டும். பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று அறிவுரை வழங்கினார். இக்கூட்டத்தில், மின் உற்பத்திமற்றும் பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், இணை இயக்குநர் எஸ்.வினீத், மின் தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் நிதி இயக்குநர்கள், தொழில்நுட்ப இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்