Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேன்பூச்சிகளுடன் கரோனா நோயாளிகள்

மே 09, 2021 10:49

 திருவாரூர் மாவட்டத்தில் கரோனாத் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள், திருவாரூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைகள், வலங்கைமான் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் உள்ள சிறப்புச் சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகக் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் ஆங்காங்கே மலைத்தேன் கூடு கட்டியுள்ளதாக, அங்கேத் தங்கிச் சிகிச்சைப் பெறும் கரோனாத் தொற்று நோயாளிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.  

குறிப்பாக மூன்றாவது மாடி, ஐந்தாவது மாடி போன்ற பகுதிகளில் மலைத் தேன்கூடு உள்ளதாகவும், ஐந்தாவது மாடியின் உள்புறப் பகுதியிலேயே, வரண்டாவிலேயே தேன்கூடு இருப்பதாகவும் தெரிகிறது. கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதியில் தேன்கூடு இருப்பது தெரியாமல், சில நேரங்களில் நோயாளிகள் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்கும்போது, தேன் பூச்சிப் பறந்து உள்ளேச் சென்று நோயாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.  

அதேபோல ஐந்தாவது மாடி உள்பகுதியில் வரண்டாவில் உள்ள தேன் பூச்சிகள், சில நேரங்களில் நான்காவது மற்றும் மூன்றாவது மாடியில் உள்ள நோயாளிகள் அறை வரை வந்து செல்வதாக, அப்பகுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.  எனவே மத்திய பல்கலைக்கழகக் கட்டிடத்தில் உள்ள தேன்கூடுகளை  அழித்து, தேன் பூச்சிகளிடமிருந்து கரோனா நோயாளிகளைப் பாதுகாத்திட, அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அங்கு தங்கியுள்ள கரோனாத் தொற்றுச் சிகிச்சை பெறும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்