Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிப். 28ம் தேதிக்கு பின் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் சேகரிப்பு இடமாற்றம் கூடாது

பிப்ரவரி 01, 2019 02:12

புதுடெல்லி: மக்களவை தேர்தலுக்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரம் அடைந்த நிலையில், அதிகாரிகள் இடமாற்றத்தை பிப். 28க்குள் முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்கு, மத்திய போலீஸ் படை விவரம் அளிக்க உள்துறைக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. 4 மாநில தேர்தலுடன் ஜம்மு-காஷ்மீருக்கும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

வருகிற மார்ச் முதல் வாரத்தில் மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்புள்ளதால், தொடர்ந்து 3 ஆண்டுகளாகச் சொந்த மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரும் மக்களவைத் தேர்தலுடன், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலும் நடத்தப்பட உள்ளது.  

16வது மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், ஆந்திர மாநில சட்டசபை ஜூன் 18, அருணாசலப் பிரதேச சட்டசபை ஜூன் 1, ஒடிசா சட்டசபை ஜூன் 11, சிக்கிம் சட்டசபை மே 27ம் தேதிகளில் நிறைவடையவுள்ளன. மக்களவை மற்றும் 4 மாநில தேர்தல் தொடர்பான பணிகளில் ஏராளமான அதிகாரிகள் ஈடுபட உள்ளதால், அதிகளவில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய விரும்பவில்லை.  

ஆனால்,  தொடந்து 3 ஆண்டுகளாக சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டியது அவசியம். தேர்தல் காலங்களில், இதுபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதிகாரிகள் தேர்தல் சம்பந்தமான நடவடிக்கையில் தலையிடக்கூடாது என்பதற்காகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. 

கடந்த காலங்களில் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அதிகாரிகள் மற்றும் நீதிமன்றங்களில் கிரிமினல் வழக்குகளைச் சந்தித்து வரும் அதிகாரிகளைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். அந்த வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ ஆகியோர் அடங்குவர். கடந்த 2017ம் ஆண்டு மே 31ம் தேதிக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலின்போது பணியாற்றிய இடங்களுக்கு மீண்டும் நியமிக்கப்படக்கூடாது.  

அங்கு நீடிக்க அனுமதிக்கப்படக்கூடாது. இந்த உத்தரவு, தேர்தல் பணியுடன் நேரடி தொடர்புடைய மாவட்ட கலெக்டர், துணை கலெக்டர், இணை கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோருக்கும், காவல் துறையில் ஐஜி முதல் எஸ்ஐ வரை பொருந்தும். இன்னும் 6 மாதத்துக்குள் ஓய்வு பெறும் அதிகாரிகள், தேர்தல் தொடர்பான பணியில் இருந்தால், அவர்கள் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தேர்தல் பணி எதுவும் வழங்கப்படாது.  

பொய்யான வாக்குறுதி அளிப்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இடமாறுதல், நியமனம் ஆகியவற்றை பிப்ரவரி 28ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கைகளை மார்ச் மாதம் முதல் வாரத்துக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. அதனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கான இறுதிகட்ட பணிகள் முடிவடைந்த நிலையில், இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: மக்களவை தேர்தலுடன், சிக்கிம், அருணாசல பிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ேதர்தல் நடக்கவுள்ளது. குடியரசு தலைவர் ஆட்சி நடக்கும் ஜம்மு - காஷ்மீரிலும், மேற்கண்ட தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்துவது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரிகள் அந்த மாநில நிலைமை குறித்து ஆய்வு நடத்தி உள்ளனர்.  

வரும் பிப். 28ம் தேதிக்கு முன்னர், அதிகாரிகள் இடமாற்றத்தை முடித்துக் கொள்ள மாநில அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின், எவ்வித இடமாற்றம், நியமனம் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய ஆயுத போலீஸ் படை வீரர்கள் 1.25 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அதன் விவரங்கள் குறித்து மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் கூறின.

தலைப்புச்செய்திகள்