Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி நேரடி வினியோகம் - பாரத் பயோடெக்

மே 12, 2021 04:28

ஐதராபாத்: தடுப்பூசி தயாரிப்பாளர்களே தடுப்பூசிக்கு விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம். தயாரிக்கப்படும் தடுப்பூசியில் 50 சதவீதத்தை மத்திய அரசுக்கும், மீதமுள்ள 50 சதவீதத்தை மாநில அரசுகளுக்கும் பொதுச் சந்தை விற்பனைக்கும் வழங்கலாம் என்றும் மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இதனிடையே ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. இந்த சூழலில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கான விலையை மாநில அரசுகளுக்கு ரூ.600 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1,200 என்றும் நிர்ணயித்தது.

பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசுக்கு நிர்ணயித்திருக்கும் விலையை விட மாநில அரசுகளுக்கு மூன்று மடங்கு விலை நிர்ணயித்தது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 29-ம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் மாநிலங்களுக்கான விலையை ரூ.400 ஆக குறைத்தது.

இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 18 மாநிலங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி நேரடி வினியோகம் செய்யப்பட்டு வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட 18 மாநிலங்களுக்கு கடந்த 1-ம் தேதியில் இருந்து கோவாக்சின் தடுப்பூசிகளை நேரடியாக வினியோகித்து வருகிறோம். தொடர்ந்து நேரடியாக வினியோகிப்போம்” என்று அதில் தெரிவித்திருந்தது.

தலைப்புச்செய்திகள்