Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாத் தொற்று.

மே 12, 2021 03:09

திருவாரூர்: குடவாசல் அருகில் உள்ள விபீஷ்ணபுரம் ஊராட்சி நாலாங்கட்டளைக் கிராமத்தில், கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்துக்குட்பட்ட விபீஷ்ணபுரம் ஊராட்சி நாளங்கட்டளை என்ற கிராமத்தில் உள்ள காளியம்மன் திருக்கோயிலில் வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தீமிதித் திருவிழா, இவ்வாண்டு மே மாதம் 3-ஆம் தேதி நடந்துள்ளது. இத்திருவிழாவில் இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கலந்து கொண்டுள்ளனர். 

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இக்கிராமத்திற்கு அருகிலுள்ள திருவிழிமழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தினசரி பத்துக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர்.  இதனால் சந்தேகமடைந்த ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவரும், குடவாசல் வட்டார மருத்துவ அலுவலருமான த.பாலாஜி, மாவட்ட சுகாதாரத்துறைத் துணை இயக்குனர் டாக்டர் கீதா அறிவுரையின்படி, திங்கட்கிழமை நாளங்கட்டளைக் கிராமத்திற்கு மருத்துவர்கள் விக்னேஷ், நிவேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினருடன் சென்று, 120 நபர்களுக்குக் கொரோனாத் தொற்றுப் பரிசோதனை நடத்தியுள்ளார்கள். 

இந்தப் பரிசோதனை முடிவுகள் புதன்கிழமைக் கிடைக்கப் பெற்றதில், கிராமத்தைச் சேர்ந்த 47 பேர் கரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்து, அவர்களை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, புதன்கிழமைக் கிராமத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாத் தொற்றுப் பரிசோதனைச் செய்து, மற்ற பொதுமக்களுக்குக் கபசுரகுடிநீர் அளித்து, அரசு அறிவித்துள்ள கரோனாத் தொற்று வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றி நடந்திட வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். 

தொடர்ந்து கிராமப்பகுதியில் உள்ள 600க்கும் மேற்பட்டவர்களுக்குக் கரோனாத் தொற்றுப் பரிசோதனைச் செய்யப்படுமெனத் தெரிகிறது. குடவாசல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரின் அறிவுரையின் பேரில் விபீஷ்ணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன் தலைமையில் ஊராட்சிப் பணியாளர்கள் அப்பகுதியைத் தகரத்தால் அடைத்துத் தடைசெய்து, பிளிச்சிங் பவுடர் அடித்தும், கிருமிநாசினி தெளித்தும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்