Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரோனா 2-வது அலை பரவலால் பாதிப்பு ஏற்பட்டாலும் கிராமப்புற மக்களுக்கு கைகொடுக்கும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்

மே 15, 2021 07:34

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா பரவலின் 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. இந்நிலையில் வேலை யிழந்த முறைசாரா பணியாளர்கள் பலருக்கும் கைகொடுக்கிறது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ்) திட்டம். ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மொத்தம் 2.2 கோடி குடும்பம் ஏப்ரல் மாதத்தில் வேலை உறுதித் திட்டத்தில் பலனடைந்துள்ளதாக கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட புள்ளி
விவரம் தெரிவிக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பலனடைந்த குடும்பத்தினரின் எண்ணிக்கையை விட இரு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு (2020) நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு இத்திட்டம் நிறுத்தி  வைக்கப்பட்டது. அதன் பிறகு மே மாதத்தில் முழுமையாக அமல்படுத்தப்பட்டது.

தற்போது இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதால் பெரும்பாலான மாநிலங்கள் ஏப்ரல் மாதம் பிற்பாதி மற்றும் மே மாத தொடக்கத்திலிருந்து ஊரடங்கை செயல்படுத்தி வருகின்றன. ஊரக வேலை உறுதி திட்டத்தின் படி ஆண்டுக்கு 100 நாள் வேலை உத்தரவாதமாக அளிக்கப்படும். 10 சதவீத குடும்பங்கள் இதன்மூலம் பயனடைகின்றன.  சராசரியாக 40 நாள் முதல் 50 நாள் வேலையை பெறுகின்றன. 2020-21ம் நிதி ஆண்டில் இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.1,15,000 கோடி ஒதுக்கியது..

கரோனா தொற்று காலத்தில் ஊரடங்கின் போது உலகிலேயே மிகச் சிறந்த வேலை உறுதி திட்டமாக இத்திட்டம் பார்க்கப்பட்டது. 100 நாள் வேலை பெறுவதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ஒரு குடும்பத்துக்கு ரூ.22 ஆயிரம் கிடைக்கும். வைரஸ் பரவலுக்கு முந்தைய காலத்தில் சராசரியாக மாதம் 2.2 கோடி குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அதே 2020 மே-ஜூன் மாதங்களில் இத்திட்டத்தின்கீழ் பலனடைந்த குடும்பங்களின் எண்ணிக்கை 3.5 கோடியாகும்.

வறட்சி பாதித்த மாநிலங்களில் இத்திட்டத்தின்கீழ் அளிக்கும் வேலை நாள்களின் எண்ணிக் கையை 150 ஆக அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு ஏற்பட்ட காலத்தில் புதிதாக இத்திட்டத்தில் வேலை பெற பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 1.81 கோடி. நகர்ப்பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து கிராமங்களுக்கு வந்தவர்களால் இந்த எண்ணிக்கை அதிகரித்தது. புதிதாக வேலை அட்டை பெற்றவர் களில் அதிகம் பேர் உத்தரப் பிரதேசம், பிகார், ஒடிசா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர் களாவர்.

தலைப்புச்செய்திகள்