Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்த மாத இறுதியில் தமிழகத்துக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்க வாய்ப்பு- ஆந்திர அரசு ஆலோசனை

மே 16, 2021 07:50

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர அரசு 12 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீரை தமிழகத்துக்கு தர வேண்டும் என்பது தெலுங்கு கங்கை ஒப்பந்தமாகும். அதன்படி இந்த தண்ணீரை ஜூன் மாதம் ஒரு பகுதியாகவும், செப்டம்பர் மாதம் மற்றொரு பகுதியாகவும் ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடும். அது கிருஷ்ணா கால்வாய் வழியாக பூண்டி ஏரியை வந்தடையும்.

3,231 மில்லியன் கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 846 மில்லியன் கனஅடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. தற்போது கோடைக்காலம் என்பதால் சென்னை மாநகரின் குடிநீருக்கு கூடுதல் தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த தவணை காலத்தில் 12 டி.எம்.சி.க்கு பதில் 7.6 டி.எம்.சி. கிருஷ்ணா தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு ஆந்திர அரசு திறந்து விட்டது. இன்னும் 4.4 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு தர வேண்டும்.

இந்த தண்ணீரை பெற தமிழக நீர்வளத்துறை சென்னை மண்டல பொறியாளர் ரவீந்திரபாபு ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கடந்த தவணைக் காலத்தில் தர வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளார். 68 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் தற்போது 46 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

எனவே அணையில் போதுமான தண்ணீர் உள்ளதால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கிருஷ்ணா கால்வாயில் இந்த மாத இறுதியில் தண்ணீரை திறந்து விட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது ஆந்திர-தமிழக எல்லையில் உள்ள விவசாயிகள் இதில் பாசனத்துக்கு தண்ணீரை எடுக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
 

தலைப்புச்செய்திகள்