Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கட்சி தலைவர், முதல்வர் படங்கள் இடம் பெறவில்லை; தமிழக அரசுத் திட்டங்களில் அரசியல் சாயம் அகற்றப்படுகிறதா?- புதிய முன்னுதாரணத்தை தொடங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

மே 16, 2021 08:11

தமிழகத்தில் பொறுப் பேற்ற திமுக அரசு முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் படங்கள் இன்றி கரோனா நிவாரண டோக்கன், நிவாரணப் பொருள் பைகளை வழங்கியது. இதன் மூலம் அரசியல் சாயம் இன்றி புதிய முன்னுதாரணத்தை ஸ்டாலின் தொடங்குகிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இலவச அரிசி, இலவசமாக பொங்கல் தொகுப்பு, கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, சைக் கிள், மடிக்கணினி உள்ளிட்டதிட்டங்கள் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்டன.

இந்த பொருட்களில் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா படங்கள் இடம்பெற்றிருக்கும். இதன் மூலம் யார் ஆட்சிக்காலத்தில் பொருள் வழங்கியது
என்பதை அறியமுடியும். பொங்கல் பண்டிகைக்கு இலவசமாக பொங்கல் பொருள் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது ஆட்சிக்காலத்தில் தொடங்கினார். அப்போது கருணாநிதியின் படம் அந்தப் பொருட்கள் கொண்ட பையில் இடம்பெற்றிருந்தது. இதற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

ஆனால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு முதல்வராக இருந்த கே.பழனிசாமி, பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்தார்.
இதையடுத்து அரசு சார்பில் வழங்கிய டோக்கன்களில் ஜெய லலிதா, கே.பழனிசாமி ஆகியோரது படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் சிலர் ஜெயலலிதா, கே.பழனிசாமி ஆகியோரது படங்களோடு தங்களின் படத்தை யும் பெரிய அளவில் போட்டு டோக்கன் வழங்கினர். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்தன.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முக.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். தேர்தல் அறிக்கை யில் கூறியபடி கரோனா
நிவார ணமாக ரூ.4 ஆயிரம் இரு தவணை யாக அரிசி கார்டு தாரர்களுக்கு வழங்கப்படும் எனப் பதவியேற்ற அன்றே கையெழுத்திட்டார். அதன்படி கார்டுதாரர்களுக்கு ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டன. அந்த டோக்கனில் கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின்
படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

சர்க்கரை, கோதுமை, பருப்புகள் உட்பட 14 பொருட்கள் அடங்கிய கரோனா சிறப்பு நிவாரணப் பொருட்கள் கொண்ட பை ஒன்று அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக தயாரித்த பைகளில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரது படங்கள் இடம்பெறவில்லை.

பையின் ஒருபக்கம், பொருட்களின் பட்டியலும், மற்றொரு பக்கம் தமிழக அரசின் முத்திரையோடு "நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம், தொற்றிலிருந்து
தமிழகத்தை மீட்போம்"- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் என்ற வாசகங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. இதில் முதல்வரான மு.க.ஸ்டாலின் பெயர்கூட
இடம்பெறவில்லை.

இதுவரை கடந்த கால அரசுக ளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறை மாற்றப்பட்டு, அரசியல் சாயம் எதுவும் இன்றி, தமிழக அரசால் வழங்கப்பட்டது என்பதை மட்டுமே இந்த நிவாரணத் திட்டம் நினைவூட்டுகிறது. இதன் மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசி(யலி)ல் ஒரு சிறந்த முன்னுதாரணத்தைத் தொடங்கியுள்ளாரா? இது வரும் காலங்களிலும் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்