Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாவட்ட எல்லைகளில் வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பதிவு சான்று சோதனை

மே 18, 2021 06:46

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24-ந் தேதி வரைஅமலில் இருக்கும். தர்மபுரி மாவட்ட எல்லை பகுதிகளில் வாகனங்களில் வந்தவர்களிடம் இ-பதிவு சான்று பெற்று உள்ளார்களா? என்று போலீசார் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24-ந் தேதி வரை அமலில் இருக்கும். இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், நல்லம்பள்ளி ஆகிய 7 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மற்றும் மாவட்டத்துக்குள் அவசர பயணத்துக்காக இ-பதிவு சான்று பெறும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 சோதனைச்சாவடிகளில் மாவட்ட
போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவுபடி போலீசார் நேற்று வாகனங்களில் வந்தவர்கள் இ-பதிவு செய்து அனுமதி பெற்று உள்ளார்களா? என சோதனை
நடத்தினார்கள். செல்போன்களில் இ-பதிவு ஆவணங்களை சரிபார்த்த பின்னரே மாவட்டத்துக்குள் அந்த வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.

குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் காரிமங்கலம் அருகே அமைந்துள்ள சோதனைச்சாவடி, தர்மபுரி- சேலம் மாவட்ட எல்லையில் தொப்பூர் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஆகியவற்றில் இ-பதிவு சான்று பெற்று உள்ளார்களா? என்பது குறித்து வாகனங்களில் வந்தவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 75 சிறிய சோதனைச்சாவடிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையிலும் முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் போக்குவரத்து மைய பகுதிகளில் தலா 3 குறு சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது வாகனங்களில் செல்பவர்கள் அத்தியாவசிய தேவைகள், அவசிய மருத்துவத் தேவைகளுக்காக சொல்கிறார்களா? என்பதை முழுமையாக விசாரித்த பின்னரே மேற்கொண்டு செல்ல அனுமதித்தனர்

தலைப்புச்செய்திகள்