Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நாளை தொடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

மே 19, 2021 05:47

சென்னை: சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில், இன்னர் வீல் கிளப் ஆப் அடையாறு மற்றும் ஜிட்டொ வர்த்தக நிறுவனம் இணைந்து 6 பேர் பயன்படுத்தக்கூடிய ஆக்சிஜன் செறிவூட்டி பொருத்தப்பட்ட பஸ்சையும், செஞ்சிலுவை சங்கத்தினர் ரூ.2 கோடி மதிப்பிலான வென்டிலேட்டர்களையும், மருத்துவம் மற்றும் மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் நேற்று வழங்கினர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பது போக போகத்தான் தெரியும். கொரோனா தொற்றை தடுக்க ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக இருக்கிறது.
ஊரடங்குக்கு முன்னால் 25 ஆயிரம் வரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஊரடங்குக்கு பிறகு தற்போது பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை 33 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்கிறது. சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது.

8 மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முறையில், சென்னையை போல மற்ற
மாவட்டங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஊரடங்கை இன்னும் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று
மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஊரடங்கு முடிவதற்குள் தொற்று எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். ஊரடங்கு கடுமையாகத்தான்
இருக்கும். இது ஒரு கசப்பு மருந்து தான். அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் மூலம் 400 பேருக்கு பரவுகிறது.
மிதமான கொரோனா தொற்றுள்ளவர்கள் தங்க வைக்கப்படுகிற, கொரோனா பராமரிப்பு மையத்தில், 4,690 படுக்கைகள் சென்னையில் காலியாக இருக்கிறது.

ஈஞ்சம்பாக்கம், விருகம்பாக்கம், தண்டையார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.
மிதமான தொற்றுக்கு மேல் பாதிப்பு உள்ளவர்கள் இங்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம். ராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி மைதானத்தில்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆக்சிஜன் செறிவூட்டிகளுடன் கூடிய 100 படுக்கைகளை அமைத்துள்ளார். விரைவில்
அவை பயன்பாட்டுக்கு வரும்.

அண்ணாநகர், சைதாப்பேட்டை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதனால் மக்கள் பதற்றம் அடைய வேண்டாம். சென்னையை பொறுத்தவரை, ஆக்சிஜன் படுக்கைகள், சாதாரண படுக்கைகள், சித்த மருத்துவத்திலும் படுக்கைகள்
காலியாக உள்ளன. 78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது.

அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி நடந்து வருகிறது. 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட,
சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தி, அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது. அந்தவகையில் நாளை (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் 18
வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைப்பார். அதிலும் குறிப்பாக, ஆட்டோ டிரைவர், ஆலை தொழிலாளர்கள்,
மாற்றுத்திறனாளிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்.

கருப்பு பூஞ்சை நோயால் தமிழகத்தில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் இன்று (நேற்று) காலை ஒரு புகார் மனு வந்தது. அந்த புகார் மனுவில், திண்டிவனத்தில் டாக்டர் ராமன்
என்பவர் அண்மையில் கொரோனா பாதிப்பில் இறந்து விட்டதாகவும், அவருக்கு போலியான ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டதாகவும் அவருடைய சகோதரர்
கூறியுள்ளார்.

அந்த டாக்டர் இறப்புக்கு காரணமான மருந்து ஒன்றையும் கொண்டு வந்து எங்களிடம் கொடுத்தார். நானும், செயலாளரும் அந்த மருந்தை மருத்துவ
வல்லுனரிடம் காட்டியபோது அது போலியான மருந்து என்பது நிரூபணமானது. உடனடியாக சென்னையில் இருந்து அலுவலர்கள் திண்டிவனத்துக்கு விரைந்தனர். திண்டிவனத்தில் உள்ள ஐமேடு என்கிற தனியார் மருத்துவமனையில், அந்த
மருந்து தரப்பட்டதாக புகார் வந்தது.

அந்த மருத்துவமனைக்கு சுகாதார சட்டம் விதி 76-ன் படி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து பெற, இன்று (நேற்று) மட்டும் 234 ஆஸ்பத்திரிகளை முதல்-அமைச்சரின் ஆணைக்கினங்க தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம்
‘ஆன்-லைனில்’ பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால், அந்த இணையதளத்தை பார்க்கும் போது 234 ஆஸ்பத்திரிகள் பதிவு செய்து விட்டு, அதில் 71
ஆஸ்பத்திரிகள் 8 ஆயிரத்து 400 ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு ‘ஆர்டர்’ கொடுத்துள்ளனர்.

ஆவணங்களை சரி செய்தபிறகு இரவோடு இரவாக ரெம்டெசிவிர் மருந்து ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்படும். ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும்
தேவை கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்