Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தமபாளையம் அருகே கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி

மே 19, 2021 06:01

உத்தமபாளையம்: தமிழக அரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது. இந்த தொகை அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் கடந்த 15-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நோய் தொற்றில் இருந்து மக்களை
காக்கவும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு, தாராளமாக நிதி வழங்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து பல்வேறு
தரப்பினரும் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகிறார்கள்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ஓடைப்பட்டி பேரூராட்சி சுக்காங்கல்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி ரத்தினம்மாள் (வயது 74). இவர்
தங்களுக்கு அரசு கொடுத்த கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பினார். வயதான இந்த தம்பதி தங்கள் பிள்ளைகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். இருந்தபோதிலும் தங்களால் இயன்ற உதவியை அரசுக்கு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனைகொடுத்ததாக ரத்தினம்மாள் தெரிவித்தார்.

இதுகுறித்து ரத்தினம்மாள் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இதற்காக அரசு
பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பலரும் உதவி செய்து வருகின்றனர். எங்களால் பண உதவி செய்ய இயலவில்லை. என்றாலும் அரசு கொடுத்த
பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தேன். அதன்படி நான் பெற்ற கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரத்தை வாங்கிய கூட்டுறவு சங்கத்திலேயே அதன் செயலாளரிடம் கொடுத்து அதை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்தேன் என்றார்.

இதையடுத்து அந்த பணம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தங்கள் சேமிப்பு பணத்தை முதல்-அமைச்சர் நிவாரணநிதிக்கு அனுப்பி வரும் நிலையில், அரசு கொடுத்த பணத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு மூதாட்டி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்புச்செய்திகள்