Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் இ-பதிவு இல்லாமல் வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு: போலீசார் கெடுபிடி தீவிரம்

மே 19, 2021 06:02

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர்களுக்கு ‘இ-பதிவு’ முறை 2 வாரங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.

இந்தநிலையில் திருமணம், நெருங்கிய உறவினர், மருத்துவ தேவைகள், முதியோர் பராமரிப்பு ஆகிய அத்தியாவசிய காரணங்களுக்காக தமிழ்நாட்டில் மாவட்டம்
விட்டு மாவட்டம் பயணிக்கவும், மாவட்டத்துக்குள் செல்லவும் ‘இ-பதிவு’ கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக http://eregister.tnega.org என்ற இணையதள முகவரியை அரசு வெளியிட்டது.

தமிழக அரசின் ‘இ-பதிவு' உத்தரவு நேற்றுமுன்தினம் அமலுக்கு வந்தது. ஆனால் சென்னையில் பெரும்பாலானோர் ‘இ-பதிவு' இல்லாமல், வழக்கம் போல்
சென்று வந்தனர். முதல் நாள் என்பதால் போலீசாரும் மென்மையான போக்கை கடைபிடித்து, வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகளை மட்டும் வழங்கி அனுப்பி
வைத்தனர். இதனால் அரசின் உத்தரவு முறையாக கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்றுமுன்தினம் இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘பொதுமக்கள் 18-ந்தேதியில் (நேற்று) இருந்து காலை 10 மணி முதல் ஒரு போலீஸ் நிலைய எல்லை பகுதியில் இருந்து மற்றொரு எல்லைக்கு வெளியே செல்வதற்கு ‘இ-பதிவு’ அவசியம். இந்த நடைமுறையை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’ என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி சென்னை நகர் முழுவதும் போலீசார் நேற்று காலை 10 மணிக்கு மேல் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். சோதனைச்சாவடி போன்று 153 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

200 போலீசார் மோட்டார் சைக்கிள் மூலமாகவும், 309 போலீசார் கார் மூலமாகவும் ரோந்து பணியுடன், முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

போலீசாரின் இந்த கெடுபிடி நடவடிக்கையால் காலை 10 மணிக்கு மேல் வாகனங்களில் வந்தவர்கள் பாடு திண்டாட்டம் ஆனது. அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மருத்துவம், தூய்மை பணியாளர்கள், அரசு ஊழியர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் உள்பட தமிழக அரசால் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட துறையை சேர்ந்தவர்களின் அலுவலக அடையாள அட்டையை சரிபார்த்து அனுமதித்தனர்.

அதே போன்று இ-பதிவு செய்தவர்களின் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டன. இ-பதிவு இல்லாத வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை. அரசு உத்தரவை கடைப்பிடிக்காமல் வெளியே சுற்றியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை நகரின் இதயபகுதியான அண்ணாசாலையில் போலீசார் நடத்திய வாகன தணிக்கையால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு
சில வாகன ஓட்டிகள் ‘ஹாரன்’ சப்தம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். ஆனால் போலீசார் அதனை கண்டுகொள்ளாமல் அனைவரது வாகனங்களையும் அசராமல் கண்காணித்தனர்.

இ-பதிவு இல்லாதவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு புறப்பட்டு செல்லலாம் என்று போலீசார் கண்டிப்புடன் கூறினர். சென்னைக்குள் மட்டுமின்றி மாவட்ட எல்லைகளிலும் போலீசாரின் ‘இ-பதிவு’ சோதனை கடுமையாக இருந்தது.

‘இ-பதிவு’ சோதனையில் நேற்று எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது? ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காக எத்தனை பேர் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டது? குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்